முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பலருக்கு தொலைபேசி அழைப்புகளை எடுத்து மேற்கொண்ட உரையாடல்கள் அடங்கியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் சம்பந்தமான விசாரணை நடத்த உடனடியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என இன்று நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில தொலைபேசி அழைப்புகள் காரணமாக நீதிமன்றத்தின் சுதந்திரம் தொடர்பாகவும் கௌரவம் தொடர்பாகவும் பாரதுரமான கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அரிசி விலைகளை குறைப்பது சம்பந்தமாக துரிதமாக வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரிடம் கோரியுள்ளனர்.
அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கின்றனவா என்பது தனிப்பட்ட ரீதியில் தேடிப்பார்க்குமாறு பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.