ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட இறுவெட்டுக்கள் தொடர்பில் ரணில் கேள்வி..?

Report Print Kanmani in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட இறுவெட்டுக்களின் உள்ளடக்கங்கள் ஊடகங்களின் மத்தியில் எவ்வாறு பரப்பப்பட்டதென ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட இறுவெட்டுக்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சாட்சியங்கள் அவர் விடுதலை செய்யப்பட்டு சில மணி நேரங்களில் ஊடகங்களுக்கும், மற்றவர்களுக்கும் கசிந்துள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இறுவெட்டுக்களின் நகல்களைப் பெற்று அவற்றை ஆராய்ந்து, எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து அந்த உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2016ம் ஆண்டிலிருந்து அனுமதிப்பத்திரம் புதுப்பிக்காத கைத்துப்பாக்கி, 127 தோட்டாக்கள், இரண்டு கணினிகள், சந்தேகத்திற்கு இடமான சில ஆவணங்கள், இறுவெட்டுக்கள் என்பனவற்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நேற்று முன் தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமே நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டினை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.