துமிந்த சில்வாவை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முயற்சி! ஹிருனிகா குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

துமிந்த சில்வாவை விடுவிப்பதற்கான தளம் உருவாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரத லக்ஷ்மன் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஏற்கனவே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் இறுவட்டில் ஷானி அபேசேகர, வழக்கில் என்ன நடந்தது என்பதை கூறியிருக்கிறார்.

இதனை வைத்துக்கொண்டு அபேசேகரவை விசாரணை மேற்கொள்ள வேண்டிய வழிகளை ரஞ்சன் ராமநாயக்க அவரிடம் கூறவில்லை.

அதேவேளை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்கவுடன், ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடலை வைத்துக்கொண்டு துமிந்த சில்வாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்று ஊடகங்கள் கூறுவது அபத்தமானது.

இவையாவும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் துமிந்த சில்வாவை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கும் முயற்சிகளாக உள்ளன.எனினும் நாட்டின் மக்கள் இதற்கு உரிய பாடத்தை புகட்டுவர் என்றும் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.