மஹிந்தானந்தவை கொலை செய்ய ரணில், ரஞ்சன் போட்ட திட்டம்? விசாரணைக்கு கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்
129Shares

.தன்னை சுட்டுப்படுகொலை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் திட்டமிட்டதாக தொலைபேசியில் உரையாடிய கலந்துரையாடல் அம்பலமாகியுள்ள நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்தும்படி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் நாளைய தினம் முறையிடவுள்ளதாகவும், சட்டநடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஒருமணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிறப்புப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.

தன்னை படுகொலை செய்வதற்கு திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்தும்படியும் அவர் கோரிக்கை முன்வைத்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்ற குரல் பதிவுகள் குறித்து சபையின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் நடத்திய தொலைபேசி உரையாடல் அம்பலமாகியுள்ளது.

அதில், மஹிந்தானந்த அளுத்கமவை சுட்டுக்கொலை செய்ய தாம் பயிற்சி பெறுவதாகவும், அதற்கான உத்தரவை பிரதமரே வழங்கியிருப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க அதன்போது தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க என்னைக் கொலை செய்வதற்கான ஆசிர்வாதத்தை ரணிலிடமிருந்து பெற்றுக்கொண்டார். 2016 பெப்ரவரி மாதம் மாதிவெல குடியிருப்பில் தனது துப்பாக்கியில் ரஞ்சன் ராமநாயக்க பயிற்சிபெற்றிருந்தார்.

மஹிந்தானந்த மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபின் ரஞ்சன் ராமநாயக்கவின் துப்பாக்கிப் பயிற்சியில் ஏற்பட்ட விபத்தாக அதனை கூறுமாறு ரணில் விக்ரமசிங்க ஆலோசனை கூறியதும் அந்தக் குரல் பதிவில் உள்ளது.

அதேபோல பொலிஸ்மா அதிபரும் தன்னைக் காப்பாற்றியதாக ரஞ்சன் கூறுகின்றார். மத்திய வங்கி மோசடி பற்றி மக்கள் பிரதிநிதியாக பிழைகளை சபையில் சுட்டிக்காட்டினோம்.

அதற்காக முன்னாள் பிரதமர் ரணில் உறுப்பினர்களைக் கொலை செய்ய அனுமதி வழங்குவதால் என்ன நடக்கிறது? இது மிகவும் துரதிஸ்டவசமாக சம்பவமாகும். நாட்டின் பிரதமர் ஒருவர் எவ்வாறு இப்படி நடக்கமுடியும்? சபாநாயகரிடம் இதனை கூறுகின்றேன்.

இதுவா ஜனநாயகம்? ரஞ்சன் ராமநாயக்கவின் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குரல் பதிவுகள் தற்போது அம்பலமாகி வருகின்றன. நீதிபதிகள், பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பலருடனும் பேச்சு நடத்தப்பட்ட பதிவுகளும் காணப்படுகின்றன.

இதற்கு ஒட்டுமொத்த முன்னாள் அமைச்சரவையும் பொறுப்புகூற வேண்டும். அலரிமாளிகையிலிருந்தே இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே நாளைய தினம் பொலிஸார் மற்றும் சட்ட நடவடிக்கைக்குச் செல்ல நான் உத்தேசித்துள்ளேன்.

சபாநாயகர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கும்படியும் கோருகின்றேன்” என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் நடத்தியதாகக் கூறப்படும் தொலைபேசி கலந்துரையாடல் சமூக வலைத்தளங்களில் இன்றைய தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.