தைரியம் இருந்தால் செய்து காட்டுங்கள்! அரசாங்கத்திற்கு சஜித் சவால்

Report Print Murali Murali in அரசியல்

அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு தைரியம் இருந்தால் எதிர்வரும் தேசிய தினத்தன்று கிழித்தெறிந்து காட்டுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் எம்.சி.சி, எக்ஸா மற்றும் சோபா ஒப்பந்தம், சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பவற்றை இரத்து செய்வதற்கான யோசனையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பித்தால் அதற்கு முழுமையாக ஆதரவை வழங்க எதிர்கட்சி தயாராகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த நாட்டின் மக்களின் ஆணைக்கு தலைசாய்ப்பதே சபையிலுள்ள அனைவரது கடமையாகும். அதன்படி 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை அமுல்படுத்துவதற்காக மூன்றில் இரண்டு அல்ல, ஆறில் ஐந்தும் அல்ல, சபையிலுள்ள 225 உறுப்பினர்களது ஆதரவையும் வழங்க தயாராகவே இருக்கின்றோம்.

அதற்காக பொதுத் தேர்தல்வரை காத்திருக்கவும் தேவையில்லை. ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கை விளக்கத்தில் மக்களின் மகிழ்ச்சி சுட்டி என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

உண்மையிலேயே நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இருந்த பொருட்கள் சேவைகளின் விலைகளையும், இப்போது உள்ள விலைகளையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது விண்ணை தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளன.

இந்த ஒன்றரை மாதகாலத்தில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்களா? தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலவச உரம் வழங்கப்படுவதாக கூறியிருந்தாலும் கொள்கை விளக்கத்தில் அது உரமானியம் என மாற்றப்பட்டுள்ளது.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை விதைத்தால் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை பாதுகாக்க முடியாது. இறையான்மையையும் பலப்படுத்த முடியாது.

தேசத்துரோக சர்வதேச ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எதிர்தரப்பினர் உத்வேகமாக பேசினார்கள்.

எம்.சி.சி ஒப்பந்தம், எக்ஸா-சோபா மற்றும் சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் எனப் பலதையும் கூறினார்கள். ஆனால் அன்று தேர்தல் மேடைகளில் எம்.சி.சி ஒப்பந்தத்தை செய்துகொண்டால் ஆபத்து என்றார்கள்.

தலதா மாளிகைக்கு செல்லும் வழியில் ஒருபக்கம் இலங்கையர்களுக்கும் இன்னொரு பக்கம் அமெரிக்காவுக்கும் உரித்தாகும் என்றும் அச்சறுத்தினார்கள். அப்படியென்றால் நான் ஒரு யோசனை முன்வைக்கின்றேன்.

நாட்டிற்கு சூனியமாகும், ஆபத்தாகும் என்று கூறுகின்ற எம்.சி.சி ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறு கோருகிறேன். அதற்கான யோசனையை சபைக்கு கொண்டுவந்தால் முழு ஆதரவையும் வழங்குவோம்.

ஏன் சிரமமின்றி எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதியான தேசிய தினத்தில் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தால் நலமாக இருக்குமே” என அவர் மேலும் கூறியுள்ளார்.