ஐ.தே.கவினர் உள்ளிட்ட பலர் முன்வைத்த கோரிக்கையினை நிராகரித்தார் கரு!

Report Print Murali Murali in அரசியல்

மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை சமர்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் உட்பட பலரும் முன்வைத்த கோரிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார்.

குறித்த அறிக்கையை தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது பொருத்தமற்றது என சட்டமா அதிபரினால் தனக்கு எழுத்துமூலம் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டி இந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர் ,

“இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்படும் திறைசேறி முறி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட அறிக்கையை, ஆளும் கட்சி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஜனவரி 03ம் திகதி முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்தேன் என்பதை சபைக்கு அறியத்தருகின்றேன்.

சட்டமா அதிபரின் நிலைப்பாட்டுக்கு அமைய, மத்திய வங்கியினால் விநியோகிக்கப்படும் திறைசேரி முறி தொடர்பில் தற்பொழுது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்திலும் சட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம்.

எனவே இது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தற்போதைய சூழலில் பொருத்தமற்றது என சட்டமா அதிபரினால் எனக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றேன்.

இதேவேளை, தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வரான வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரில் பலரும் கடந்த ஜனவரி 3ம் திகதி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.

குறிப்பாக கோப் குழுவின் தலைவராக கடமையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெத்தியும் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.