தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக சிங்கள அமைப்புகள்! சஜித் பிரேமதாஸ சீற்றம்

Report Print Rakesh in அரசியல்

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களைக் கூண்டோடு கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறுவதற்கு நவ சிங்கள ராவய அமைப்புக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாட்டைப் பாதுகாக்கும் ஒற்றையாட்சியை எதிர்த்தும், நாட்டைப் பிளவுபடுத்தும் சமஷ்டியை வலியுறுத்தியும் கருத்துக்களைத் தெரிவித்துவரும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் தமிழ் ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தீர்வு கேட்கவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் ஏற்கும் தீர்வையே அவர்கள் கேட்கின்றார்கள்.

நாட்டைப் பிரிப்பதோ அல்லது 'தனி ஈழம்' காண்பதோ அவர்களின் குறிக்கோள் அல்ல. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இனவாதக் கருத்துக்களைப் பரப்பி மீண்டும் வன்முறைக்குத் தூபமிடுபவர்களின் வாய்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பூட்டுப்போட வேண்டும்.

எமது ஆட்சியில் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண்பதற்கான பணிகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக புதிய அரசமைப்புக் கைகூடவில்லை. அதனால் அரசியல் தீர்வு முயற்சியும் தோற்றது.

தேசிய அரசின் கட்சிகளுக்கிடையில் இருந்த முரண்பாடுகளும் எதிரணியினரின் சதி நடவடிக்கைகளுமே இவற்றுக்குக் காரணமாக அமைந்தன. நாம் இடைநடுவில் விட்ட அரசியல் தீர்வு முயற்சிக்கான பணிகளை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...