துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டால் நீதியமைச்சர், ஜனாதிபதியை விமர்சிக்க கூடாது

Report Print Banu in அரசியல்

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டால் நீதியமைச்சர் மற்றும் ஜனாதிபதியை பொது மக்கள் விமர்சிக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்த குரல் பதிவுகள் வெளிவந்தவுடன் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளதால் இந்த சூழ்நிலைகள் ஏற்படக்கூடும்.

இதன்படி துமிந்த சில்வாவை நியாயமாக நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

இதுபோன்ற விடயங்களில் தலையீடு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா சட்டத்தின் முன்னிலையில் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர் விடுவிக்கப்பட்டால் ஜனாதிபதியையோ அல்லது நீதி அமைச்சரையோ பொதுமக்கள் விமர்சிக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், இந்த வழக்கை மீள விசாரிப்பதற்கு சட்டபூர்வமான தடைகள் எதுவும் இல்லை.

அவரை சிறையில் அடைப்பதற்கு போராடியவர்களே இன்று அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை நிரூபித்துள்ளனர்.

எனவே, துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதே ஒரே வழி என தெரிவித்துள்ளார்.