துமிந்தவை விடுதலை செய்ய ரஞ்சனின் குரல் பதிவுகளை வெளியிட்டுள்ளனர் - ஹிருணிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

தனது தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளி என முடிவாகி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை துரிதமாக விடுதலை செய்வதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிட்டுள்ளனரா என தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சம்பவத்தை பயன்படுத்தி துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்கான அடித்தளம் இட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாற்றங்களை ஏற்படுத்த போவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பொது மன்னிப்பு வழங்கி துமிந்த சில்வாவை விடுதலை செய்வாரா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹிருணிக்கா, ஜனாதிபதி கோட்டாபயவை கெடுப்பது பிரதமர் மகிந்த ராஜபக்ச எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. பிரதமர் அண்மையில் அரச நிறுவனம் ஒன்றுக்கு நியமித்த ஒருவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கினார்.

ரஞ்சன் ராமநாயக்க, விசாரணைகள் எப்படி நடக்கின்றது என்றே குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் பேசியுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு இருப்பது போல் அரச அதிகாரிகளுடன் பேசும் உரிமை ரஞ்சனுக்கும் இருக்கின்றது. ஊடகவியலாளர்கள் பேனாவில் செய்யும் அதேவேலையை நாங்கள் நாடாளுமன்றத்தில் செய்கின்றோம். நல்லாட்சி அரசாங்கம் நீதித்துறையில் எந்த தலையீடுகளையும் செய்யவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நீதித்துறை சுயாதீனமாக முன்னெடுக்க முடிந்தது. ரஞ்சனுக்கும் ஷானி அபேசேகரவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடந்ததாக அரச ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தவில்லை எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers