ரணிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு! தலைமை பதவியிலிருந்து விலகுமாறு தேரர்கள் கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க உடனடியாக விலக வேண்டும் என்று பௌத்த தலைமைத் தேரர்கள் சிலர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பிரதான பௌத்த தலைமைத் தேரர்கள் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து வடமேல்மாகாண பிரதானசங்க சபைத் தலைவர் முகுனுவட்டவன சித்தந்த தேரர் கருத்து வெளியிடுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். சஜித் பிரேமதாஸ அணியினர் கூறும் விடயங்கள் அனைத்தையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதாவது, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய நபரால் அதற்கான தோல்வியையும் பங்கிடாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தற்போதைய தலைவர் உடனடியாக விலகவேண்டும்.

அத்தோடு தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவும் எதிர்பார்க்கக்கூடாது. அவருக்குத் தகுதியான பதவியே தற்போது வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கினால்தான் கட்சியினதும், நாட்டினதும் எதிர்காலம் சிறந்து விளங்கும் என்று தெரிவிக்கவிரும்புகிறோம்.

கரு ஜயசூரிய என்னென்ன சிந்தனையில் இருக்கின்றார் என்பது எமக்குத் தெரியாத போதிலும், ஆட்சி சூழ்ச்சியின் 52 நாட்களில் சபாநாயகராக அவர் கொண்டிருந்த நிலையான முடிவின் ஊடாக அவரே தலைமைத்துவத்திற்குப் பொருத்தமானவர் என்பதை அறியமுடியும்.

அதனடிப்படையில் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு நாட்டை வழிநடத்திச்செல்ல அவர் ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers

loading...