நல்லாட்சி அரசு மக்களை கடனாளியாக்கியுள்ளது! அங்கஜன் இராமநாதன்

Report Print Yathu in அரசியல்

பத்தாயிரம் வீடுகள் என்ற போர்வையில் 40,000இற்கு அதிகமானோரை நல்லாட்சி அரசு கடனாளியாக்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று 9ஆம் திகதி ஓர் முக்கியமான நாள். நல்லாட்சி என நம்பி ஏமாந்து இன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 5 ஆண்டுகளில் பல நல்ல விடயங்கள் நடைபெறும் என எண்ணி ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

வெள்ளை வான் என்றார்கள், போர்குற்றம் என பல்வேறு குற்றங்களை சுமத்தினார்கள். சாட்சியங்களுடன் நிரூபிக்க 5 ஆண்டுகள் வழங்கினோம் நடக்கவில்லை.

நாம் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் கால அவகாசத்தினை வழங்கியிருந்தோம். ஆனால் கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது. அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மக்களை ஏமாற்றியதே மிச்சமாகியது.

அதன் பின்னர் அபிவிருத்தி என்றார்கள். நிலைபேறான அபிவிருத்தி எங்கும் இடம்பெறவில்லை. கம்பரெலியவே ஆறுதல் பரிசாக கிடைத்தது. அதுவும் வெறுமனே 100 மீட்டர் வீதிகளாகவும், மதில்களாகவும் முழுமையாக்கப்படாத அபிவிருத்திகளாகவே கிடைத்தன.

அதுவும் அபிவிருத்தி அடைந்த பகுதிகளுக்கு மேலும் கிடைத்தது. அபிவிருத்திக்காக காத்திருந்த மக்கள் இன்று காத்திருப்பதாகவே உள்ளது.

அது தவிர்ந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று அடைந்தது வறுமையில் முதல்நிலை அடைந்ததே இவர்கள் தந்த அபிவிருத்தி. மக்களின் வறுமையை இவர்களின் அபிவிருத்தியால் ஒழிக்க முடியவில்லை. மேலும் மேலும் வறுமைக்குள் மக்களை கொண்டு சென்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...