மட்டக்களப்பில் பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரை ஐக்கிய தேசியக் கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் தாக்கமுற்பட்டது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் 22ஆவது அமர்வு இன்று காலை நடைபெற்ற வேளையில் சபையில் உறுப்பினர்கள் சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டதனால் சபையினை ஒத்திவைத்து வெளியேற முற்பட்டபோது தம்மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக மண்முனைப்பற்று தவிசாளர் எஸ். மகேந்திரலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தவிசாளரிடம் காத்தான்குடி பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

தான் வெளியேறியபோது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர் தன்னை வெளியேறவிடாமல் தடுத்து தனது கையினை அழுத்தியதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று காலை அமர்வு ஆரம்பமான நிலையில் தங்களுக்கு இருந்த நியாயமான கேள்விகளை கேட்டபோது அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய தவிசாளர் பிரதேச சபைகளின் சம்பிரதாயங்களை மீறி வெளியேறிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான த.தயானந்தன், கே.தினேஸ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் தவிசாளர் மீது எந்த தாக்குதல் முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனவும் வீண் பழியை தம்மீது சுமத்துவதாகவும் இன்றைய பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அதற்கு சாட்சி பகிர்வார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers