மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிராகரிப்பு

Report Print Ashik in அரசியல்

மன்னார் பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவு திட்டமானது அதிகளவான உறுப்பினர்களின் எதிர்ப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் 2020ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டமும், சபையினுடைய 22ஆவது அமர்வும் இன்றைய தினம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் கணக்கறிக்கை சபை அங்கத்தவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், குறித்த அறிக்கையானது அதிகமான பிரதிநிதிகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொண்சால் குலாஸ் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் பிரதேச சபையின் உழவு இயந்திரப் பிரச்சினை இதுவரை முடிவின்றி தொடர்வதாகவும், மன்னார் பிரதேச சபையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சருடைய புகைப்படம் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையிலும் அகற்றப்படாமல் இராணுவத்தினர் அகற்றியதன் மூலம் மன்னார் பிரதேச சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மோட்டர் வாகனம் தொடர்பான கணக்குகள் மாதம் மாதம் சரிவர வழங்கவில்லை என்ற அடிப்படையிலும், அதே நேரத்தில் மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக பிரதிநிதிகள் ஒப்பமிட்டு வழங்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எந்தவித கவனமும் செலுத்தப்படவில்லை என்ற அடிப்படையிலும், மன்னார் பிரதேச சபையில் உள்ள ஜே.சி.பி இயந்திரம் தொடர்பான கணக்குகள் ஒழுங்காக காட்டப்படவில்லை என்ற அடிப்படையிலும் குறித்த கணக்கறிக்கை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் சபை உறுப்பினர்கள் கோரிக்கைகளை அல்லது கருத்துக்களை கேட்பதற்கும், தெரிவிப்பதற்கும் ஒழுங்கான நேரம் சபை கூட்டங்களில் வழங்கப்படுவதில்லை எனவும் உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத அமர்வில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழர் விடுதலைக் இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்து வெளியேறினர்.

அதன் பின்னர் கணக்கறிக்கை தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 10 உறுப்பினர்கள் கணக்கறிக்கையை எதிர்த்தும் 8 உறுப்பினர்கள் ஆதரித்தும் வாக்களித்திருந்தனர்.

இதன்அடிப்படையில், குறித்த அறிக்கையானது பெரும்பான்மை ஆதரவு இன்மையால் நிராகரிக்கப்பட்டது.

குறித்த கணக்கறிக்கை நிராகரிக்கபட்டது தொடர்பில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் தெரிவிக்கையில்,

மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமல் அரசியல் ரீதியாக பழிவாங்கவே இந்த கணக்கறிக்கையை ஒழுங்கான காரணம் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட சிலர் நிராகரித்துள்ளனர். எனினும், எம் பணி தொடர்ந்து நடைபெறும் என அவர் தெரிவித்திருந்தார்

அதே நேரத்தில் தவிசாளர் தொடர்சியாக அரசியல் பின்னனியுடன் ஒரு பக்கச் சர்பாக செயற்படுவதாகவும், சபை உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது இல்லை எனவும் முன்னுக்கு பின் முரணாக சட்டங்களை செயற்படுத்துவதனாலும் தான் தாங்கள் குறித்த கணக்கு அறிக்கையை நிராகரித்ததாக கணக்கு அறிக்கைக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

Latest Offers

loading...