நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து மக்களுக்கு சந்தேகம்! மஹிந்த வெளிப்படுத்திய தகவல்

Report Print Murali Murali in அரசியல்

நல்லாட்சி அரசாங்கத்தினால் நீதித்துறை மீது ஏற்படுத்தப்பட்ட கலங்கத்தையும் சந்தேகத்தையும் நீக்குவதற்கான பொறுப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் மீது மக்கள் இன்று சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பார்க்க ஆரம்பித்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களை இன்றைய தினம் முற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் வெளியாகியுள்ள குரல் பதிவுகளின் ஊடாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் எவ்வாறு நீதிமன்றத்திற்கு அழுத்தங்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். நீதிமன்றக் கட்டமைப்புக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதிபலன் பயங்கரமாகும்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்கான கடமை எமக்கு இருக்கிறது. நீதிமன்றத்தின் மீது இருந்த நம்பிக்கை வீழ்ந்துள்ள நிலையில், நாட்டில் அராஜகத்தன்மை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் ஒவ்வொரு தீர்ப்புக்களையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைமை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் எமது தரப்பினர் மீது வாகனப் பாவனை மற்றும் வாகனப் பாவனைக்கான அனுமதியை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

எனது அமைச்சில் நிதி கொடுக்கல் வாங்கல் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை அது நிரூபிக்கப்படவும் இல்லை. கலாசார நிதியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிமன்றக் கட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் குறித்து நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸாரில் சிலர் தொடர்புபட்டுள்ளனர்.

இந்த நிலைமையை மாற்றி நீதிமன்றக் கட்டமைப்பை சுயாதீனத்தன்மையை பாதுகாப்பது குறித்து பிரதம நீதியரசருக்கு பொறுப்பு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றக் கட்டமைப்பு சார்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடந்த 1970ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இறைமையை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். எனினும் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளது.

நாடாளுமன்ற அரசியல் சேறுபூசும் கலாசாரத்தை நீக்கி அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை விவாதம் செய்யும் நிலைமை உள்ள நாடாளுமன்றமாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers

loading...