ஐ.நா. முடிவைப் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் - சுமந்திரன் எம்.பி. விளக்கம்

Report Print Rakesh in அரசியல்

இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசு என்ன சொல்லப்போகின்றது, என்ன எதிர்வினையாற்றுகின்றது என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்த பொறுப்புக்கூறலை ஏற்றுவிட்டு இலங்கை அரசு இப்போது அதிலிருந்து விலகி நிற்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பமாகி மார்ச் இரண்டாம் வாரம் வரைத் தொடரவுள்ளது.

இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசை ஆதரித்ததன் மூலம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் காணி விடுவிப்பு, அரசியல் கட்சிகளின் விடுதலை எனப் பல நல்ல விடயங்கள் இடம்பெற்றன.

எனினும், புதிய அரசமைப்பு உருவாக்க விடயத்தில் ஆரோக்கியமான நகர்வுகள் இடம்பெறவில்லை. அதற்கு அப்போதைய ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே காரணம்.

அவர்களின் சுயநல அரசியல் போக்கே அரசமைப்பு தடுக்கப்படக் காரணமாக அமைந்தது. அரசமைப்பு விடயங்கள் மற்றும் காணமல்போனோர் விடயங்கள் குறித்து நாம் இன்னமும் கேள்வி எழுப்பிக்கொண்டுதான் உள்ளோம்.

போர் முடிந்த பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பலர் காணாமல்போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. போர்க் காலத்தில் இறந்தவர்கள் இருக்கலாம், வெளிநாடு சென்றவர்கள் இருக்கலாம்.

ஆனால், அதனையும் தாண்டி காணாமல்போனார் குறித்த உண்மைகளைக் கண்டறிய வேண்டும். இந்த விடயத்தில் அரசியல் தலையீட்டுடன் ஒரு நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்.

மேலும், அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்துப் பேசப்படுகின்றது. இந்த ஒப்பந்ததில் சில தீமைகள் இருந்தாலும் கூட இலங்கைக்கு ஆரோக்கியமானதும் நன்மை பயக்கும் விடயங்கள் பல அதில் உள்ளன என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என குறிப்பிட்டுள்ளார்.