அடுத்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் தனது புதிய நிலைப்பாடு காரணமாக மிக மோசமான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் இலங்கை அரசு, அந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்காக நட்பு நாடுகளின் ஆதரவைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரமாக ஆரம்பித்திருக்கின்றது என்று கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
இலங்கையில் இறுதிப் போர்க் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை ஒட்டி 2015 முதல் 'இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் இல.30/01, இல.34/01, இல.37/01 ஆகிய மூன்று தீர்மானங்கள் இலங்கை அரசின் அனுசரணை மற்றும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன.
அந்தத் தீர்மானங்களின்படி இலங்கையில் இறுதிப் போர்க் காலத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து சர்வதேச தரத்துக்கு அமைய நீதி, நேர்மையான விசாரணைகளை நடத்தி, குற்றமிழைத்தோரைச் சட்டத்தின் முன்நிறுத்திப் பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் கடப்பாட்டை நிறைவு செய்வதற்கு அத்தீர்மானம் மூலம் இலங்கை இணங்கியிருந்தது.
ஆனால், அந்த நிலைப்பாட்டை அடியோடு நிராகரிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கையின் புதிய அரசு, மேற்படி தீர்மானத்துக்குத் தாம் இணங்கப்போவதில்லை என்பதை ஜெனிவாவில் நடைபெறும் ஜ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத் தொடரில் அறிவிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஜ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. மார்ச் 22ஆம் திகதி வரை அது நடைபெறுகின்றது. அதில் மார்ச் 20ஆம் திகதி இலங்கை விடயம் பரிசீலனைக்கு வரவிருக்கின்றது.
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தானும் சேர்ந்து அனுசரணைப் பணி வகித்து சபையில் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களில் இருந்தும் இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியே வருவதாக அறிவித்தால், அதன் காரணமாக சர்வதேச நாடுகளின் கடும் நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், வரையறையில்லா விளைவுகளையும் கொழும்பு சந்திக்க வேண்டி நேரும் என எச்சரிக்கப்படுகின்றது.
அதனால், அந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு, அவற்றுக்கு முகம் கொடுக்கும் திட்டத்துடன் தனக்குப் பக்கபலமாக நட்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டும் சர்வதேச நடவடிக்கைச் செயற்பாட்டில் கொழும்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிகின்றது.
ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் தற்போது அங்கம் வகித்துள்ள 47 நாடுகளில் பெரும்பாலானவை தனக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும் எனக் கொழும்பு கருதுகின்றது.
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், நேபாளம் போன்ற ஆசிய நாடுகள் தனக்குப் பக்கபலமாக இருக்கும் எனக் கொழும்பு நம்புகின்றது.
இப்போதைய சபையில் 47 அங்கத்துவ நாடுகளில் ரஷ்யா, சீனா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற எந்த நாடும் இல்லை என்பது தனக்குச் சாதகமான நிலைமை என்றும் கொழும்பு எண்ணுகின்றது.
எனினும், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றன தற்போது சபையில் அங்கம் வகிக்கும் ஜேர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் மூலம் காய்நகர்த்தி அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் எனக் கொழும்பு அஞ்சுகின்றது.
அதனால், அத்தகைய அழுத்தங்களைச் சமாளிப்பதற்குச் சபையில் தற்போது அங்கத்துவம் பெறாத சீனா, ரஷ்யா போன்றவற்றையும் அவற்றின் நட்பு நாடுகளையும் தனக்கு ஆதரவாகத் திரட்டிக் களம் இறக்கக் கொழும்பு முயற்சி எடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
கொழும்பு தனது நிலைப்பாட்டை நேரில் தெரியப்படுத்தி ஆதரவு திரட்டுவதற்காக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை தனது நாட்டுக்கு இராஜதந்திர வருகைக்காக அழைத்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் கொழும்பு வருகின்றார்.
அவர் 14ஆம் திகதி காலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்திக்கும்போது ஜெனிவா விடயம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் எனக் கூறப்பட்டது.
அன்றைய தினம் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பிக்கின்றார்.
அங்கு சீனத் தலைவர்களுடன் ஜெனிவா விவகாரம் குறித்துப் பேசும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் சீனாவின் நட்பு நாடுகளை ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துச் செயற்படும்படி தூண்டுமாறு சீனத் தலைவர்களிடம் வேண்டுகோள் வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேசமயம், அடுத்துவரும் தினங்களில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரும் கொழும்பு வருகின்றார்.
அவரிடமும், அவரது நாடு மூலம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தற்போது அங்கத்துவம் வகிக்கும் நாடுகளை கொழும்புக்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு தூண்டுமாறு கொழும்பினால் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
கொழும்பு அரசு தரப்பின் இந்தப் புதிய முயற்சி எவ்வளவு தூரம் கொழும்புக்குச் சாதகமான சூழ்நிலையை ஜெனிவாவில் கொண்டுவரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.