ஜெனிவா யோசனையில் இருந்து அரசாங்கம் விலக முடியாது! சுமந்திரன்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை சம்பந்தமாக இலங்கை அரசு வழங்கும் பதிலை கவனத்தில் கொண்டு, அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2015ஆம் அண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இணை அனுசரணையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து விலக இலங்கை அரசாங்கத்திற்கு முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை கூற உள்ள விடயத்தை ஆராய்ந்து எமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானிப்போம். ஜெனிவா யோசனைக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது.

போர் குற்றம், மனித உரிமை மீறல் உட்பட சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக் கூற அரசு வாக்குறுதியளித்துள்ளது. இந்த யோசனையில் இருந்து விலக முடியாது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு மக்கள் ஆதரவளித்தன் மூலம் பல நல்ல காரியங்கள் நடந்தன. வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் விடுவித்தல் போன்றன நடந்தன.

எனினும், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி மகிழ்ச்சியான விதத்தில் நடக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே இதற்கு காரணம்.

அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக மட்டுமல்ல, காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நாங்கள் இன்னும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றோம்.

போர் முடிந்த போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த பலர் பற்றிய தகவல்கள் இன்றும் இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பெரிய பிரச்சினை. போர் நடைபெற்ற போது இறந்து போனவர்கள் இருக்கலாம்.

அதேபோல் நாட்டில் இருந்து தப்பிச் சென்றவர்கள் இருக்கலாம். ஆனால் காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும். இது சம்பந்தமாக அரசியல் தலையீட்டின் கீழ் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதற்கு பதில் கிடைக்கும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.