இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும்! மீனாக்ஷி கங்குலி கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

சர்வதேச மனித உரிமைகள், சட்டங்களுக்கு மதிப்பளித்து இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இது தொடர்பில் கண்காணிப்பம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக முன்வைக்கப்பட்டுள்ள அதுவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வரவேற்ற யோசனையை திரும்பப்பெறப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜனவரி 4ம் திகதி அறிவித்திருந்தார்.

இது மனித உரிமைகளை காக்கும் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலான விடயம் என்றே எடுத்துக்கொள்ளமுடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே அவர் ஐக்கிய நாடுகளால் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவருக்கு இராணுவத்தளபதி பதவியை வழங்கியுள்ளார்.

காவல்துறையும் ஏனைய பொதுநிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. சிவில் புலனாய்வு நிறுவனங்களின் தலைவராக இராணுவ சேவையில் இருக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவையாவும் கடந்த சில வருடங்களில் இலங்கையில் ஏற்பட்டிருந்த மனித உரிமை மேம்பாடுகளை சிதறடிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியபோது அதற்கான உறுதிமொழியாக பயங்கரவாத தடுப்பு சட்டம் மாற்றப்படும் என்பதை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுதியளித்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு பதிலாக மாற்றுச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது என்பதையும் கங்குலி நினைவூட்டியுள்ளார்.