இலங்கையில் நீதிக்கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பேரிடி! மஹிந்த தரப்பு ஆதங்கம்

Report Print Murali Murali in அரசியல்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கலங்கமானது ஒட்டுமொத்த இலங்கையில் நீதிக்கட்டமைப்பிற்கும் ஏற்பட்ட பேரிடி என்பதோடு கறுப்பு யுகமாக இது கருதப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகக் கூறப்படும் குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களை அண்மையில் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

இந்த இறுவட்டுக்களில் உள்ள குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களிலும், இலங்கையின் பிரதான ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில், கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளின் ஆசிரியர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் வைத்து நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, செஹான் சேமசிங்க, டளஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

“அரசியலமைப்பிற்கு அமைய, கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் இருக்கிறது.

ஆனால் உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஒழுக்காற்று எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உரித்தாகும்.

நாடாளுமன்றம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முயற்சித்து இறுதியில் நீதித்துறைக்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையே மோதல் ஏற்படுவதை விடவும் பிரதம நீதியரசர் விசாரணை நடத்தி பரிந்துரை வழங்கினால் அதனை அமுல்படுத்த முடியும்.

அதேபோல இன்னுமொரு மாற்றுவழி இருக்கிறது. அதாவது ஓய்வுபெற்ற நீதியரசர்களை வைத்து ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்கமுடியும். எனவே இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டுவதற்கு புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாகவே முடியும்.

19வது திருத்தச் சட்டம் கொண்டுவந்த காலத்திலிருந்தே நீதிமன்றம் சுயாதீனமடையவில்லை என்பதை தெரிவித்து வருகின்றோம். எனினும் அதற்கு உரிய ஆதாரம் கிடைக்கவில்லை.

1970களில் முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் காலத்திலிருந்தே நீதித்துறை மீது அரசியல் அழுத்தம் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அரசியல்வாதிகளால் அழுத்தம் வழங்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரம் இன்று அம்பலமாகியுள்ளதால் வரலாற்றிலேயே மிகவும் கறுப்பு காலமாக இதனை சுட்டிக்காட்டலாம்” என கூறியுள்ளார்.