இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும்

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65000 ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளதாக வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா என்பன வேலூர் ஊரீசு கல்லூரியில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும்.

என்ற போதும் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். போர் நடைபெற்ற போது இலங்கையில் இருந்து 10 இலட்சம் தமிழர்கள் வெளியேறி விட்டனர்.

அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழர்களுக்கு உரிய வழமான வாழ்க்கை சூழ்நிலையை ஏற்படுத்திட பலமாக அமையும். இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65000 ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன.

அங்கு இன்னும் ராணுவ முகாம்கள் தான் உள்ளன. அந்த நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகின்றோம்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் அவர் தனது அரசியல் வாழ்க்கையை பௌத்தர்களுக்கு ஆதரவானதாக மேற்கொள்ள கூடும் என்ற அச்சம் உள்ளது.

அவரது போக்கு விரைவில் வரக்கூடிய பிரதமர் தேர்தலுக்கு பிறகே உறுதியாக தெரியவரும்.

அவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள, பௌத்தர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை மேற்கொண்டால் சர்வதேச அளவில் தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...