ரஞ்சனின் குரல்பதிவுகளை செவிமடுப்பதற்கு பத்து பொலிஸ் குழுக்கள்?

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் பதிவு செய்யப்பட்டு தம் வசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளை செவிமடுப்பதற்காக பத்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சத்து இருபத்து ஓராயிரம் குரல் பதிவுகள் இவ்வாறு காணப்படுவதாகவும் இவற்றை தனித் தனியாக செவிமடுத்து தகவல்களை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குரல் பதிவுகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் பத்து குழுக்களை அமர்த்தி குரல் பதிவுகளை செவிமடுப்பதற்கு பொலிஸ் தலைமையகம் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி அளவில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப்பெறவுள்ளது.

குரல் பதிவுகளை செவிமடுப்பதற்கு ஏற்கனவே பத்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரச இரசயான பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் இந்தக் குழுக்கள் தங்களது பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குரல் பதிவுகள் மூலம் நீதிபதிகள், அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளுக்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...