ஜனாதிபதி கோட்டாபய நியமித்த முதல் விசாரணை ஆணைக்குழு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கி தலையிட்டுள்ள, ஈ.டி.ஐ. பைனான்ஸ் நிதி நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்திரசிறி தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத், சிரேஷ்ட வங்கியாளரான டி.எம். குணசேகர ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈ.டி.ஐ. பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களுக்கு பணத்தை வழங்குவதற்காக சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும் நிதி நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் தவறுகள், முறைகேடுகள் சம்பந்தமாக இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.

ஈ.ஏ.பி.ஒளி, ஒலிப்பரப்பு நிறுவனத்தின் உரிமையை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய இலங்கையின் சட்டத்தை மீறி புளு சமீட் கெப்பிட்டல் மேனேஜ்மென்ட் பிரைவட் லிமிட்டட் மற்றும் பென் ஹோல்டிங் பிரைவட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் இணைந்த நிதி நிறுவன குழுமத்திடம் விற்பனை செய்தமை மற்றும் வெளிநாட்டவர்கள் இலங்கையில் அசையா சொத்துக்களை கொள்வனவு செய்யும் இலங்கையின் சட்டத்தை மீறி நிறுவனத்தை விற்பனை செய்தமை தொடர்பாகவும் விசாரணை நடத்த வர்த்தமானி அறிவித்தலில் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை மூன்று மாதங்களுக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.