ஜெனிவாவில் அரசுக்கு காத்திருக்கிறது ஆபத்து: சந்திரிக்கா ஆரூடம்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றது எனவும், அதேவேளை சர்வதேசத்துடன் முரண்படும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே, இம்முறை ஜெனிவாவில் கோட்டாபய அரசு எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி மார்ச் 22ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. மார்ச் 20ஆம் திகதி இலங்கை விடயம் பரிசீலனைக்கு வரவிருக்கின்றது.

இது தொடர்பில் சந்திரிக்கா கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை அடியோடு நிராகரிக்க வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தைக் குப்பையில் தூக்கி வீச வேண்டும் எனவும் கோட்டாபய தரப்பினர் கூறியுள்ளமை முட்டாள்தனமான கருத்தாகும்.

ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்மானம் இறுதியில் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஏனைய அனைத்து உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அரச தரப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தத் தீர்மானத்துக்கு மதிப்பளித்து இந்த அரசு நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.

அதேவேளை, கோட்டாபய அரசு வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிட்டு சர்வதேச சமூகத்துடன் முட்டி மோதுவதால் ஜெனிவாவில் இம்முறை எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியும் வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.