எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமெரிக்காவிடம், ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் எம்.சி.சி உடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் இலங்கை மக்களின் அபிலாசைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாடுகளும் ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடுகள் என்ற வகையில் எம்.சி.சி உடன்படிக்கையின் எதிர்கால நடவடிக்கைகள் பார்க்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்தபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் நிபுணர் குழு ஒன்று ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் வறுமையை விரட்டவே முன்னின்று செயற்படுகிறது. அத்துடன் பொருளாதார வளர்ச்சியையும் நோக்காகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆடைத்தொழில் துறையில் இலங்கையில் இருந்து அதிக ஆடைகளை கொள்வனவு செய்யும் நாடு என்ற வகையில் அந்த நாட்டின் முதலீட்டாளர்கள் தொழில்நுட்பத் துறையிலும் முதலீடுகளை செய்யவேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.