அமைச்சர் தொண்டமானின் கோரிக்கை காரணமாகவே சம்பளத்தை அதிகரிப்பதாக கூறினோம்! பந்துல குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியான தினத்தை கூறுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி தைப்பொங்கல் தினத்தில் அறிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், இது சம்பந்தமாக இன்னும் உரிய வேலைத்திட்டம் உருவாக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இன்னும் ஜனவரி மாதம் முடிவடையவில்லை எனவும் மார்ச் முதலாம் திகதிக்கு போதுமான காலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த இரண்டு தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்த சம்பள அதிகாரிப்பு சம்பந்தமாக முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டதை காண முடிந்தது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, தேயிலை தொழிற்துறைக்காக அரசாங்கம் நிவாரண பொதியை வழங்கியிருப்பதால், பொதுவாக வரி மானியமும் அவர்களுக்கு கிடைத்துள்ளதால், தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சம்பளத்தை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அன்றைய தினம் இலங்கை மின்சார சபையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகாரிப்பது தோட்ட நிறுவனங்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால், அரசாங்கம் தேயிலை சபையின் ஊடாக தோட்ட நிறுவனங்களுக்கு நிதியை வழங்கவும் கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடவும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

Latest Offers