கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் சிலாப பிரதேச மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய கொடுத்த உறுதிமொழி

Report Print Jeslin Jeslin in அரசியல்

தொழிநுட்ப முறைமைகள் மற்றும் சுற்றாடல் சட்ட திட்டங்களுக்கேற்ப நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சிலாபம் ஆயர் உள்ளிட்ட பிரதேசத்தின் சமயத் தலைவர்கள், பிரதேச வாசிகள் மற்றும் சூழலியலாளர்களுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலைய சூழலில் ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.

திட்டத்தை ஆரம்பிக்கும்போது இணக்கம் காணப்பட்ட சுற்றாடல் சார்ந்த உடன்படிக்கை விதிகள் கடந்த காலத்தில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தாததன் காரணமாக சுற்றாடலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

திட்டத்திற்கு பொறுப்பான நிறுவனம் மற்றும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக பணிப்புரைகளை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நுரைச்சோலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 3 ஆவது கட்டத்தின் கீழ் 900 மெகா வோட்ஸ் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.

அதன் நான்காவது கட்டம் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. நாட்டின் துரித அபிவிருத்திக்கு மின்சக்தி தீர்க்கமானதொரு அம்சமாகும். எனவே மாற்று மின்சக்தி குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.

மாற்று மின்சக்தி குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அது சுற்றாடல் மற்றும் மக்கள் நேயமிக்கதாக இருக்க வேண்டும். நுரைச்சோலை மின் நிலையத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு மின்சக்தி அமைச்சு சம்பந்தப்பட்ட பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றை ஈடுபடுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தானும் மின்சக்தி நிலையத்தை கண்காணிப்பதற்கு வருகை தருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சமயத் தலைவர்களுடனும் பிரதேச மக்களுடனும் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின்சக்தி தேவையில் 80 வீதத்தை மீள்பிறப்பாக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது. பின்தொடரல் ஆய்வை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.

அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஊழல் மற்றும் மோசடியை ஒழித்துக்கட்டி பாரிய போராட்டம் ஒன்றில் ஜனாதிபதி ஈடுபடவேண்டி உள்ளதென பேராயர் மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு முதலீடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் பேராயர் இதன்போது கவலை தெரிவித்தார்.

Latest Offers

loading...