மத்திய வங்கி கொள்ளையர்களையும், உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்: இம்ரான் எம்.பி

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

மத்திய வங்கி கொள்ளையர்களையும், உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாம் ஆட்சிக்கு வந்து மறுநாளே மத்திய வங்கி கொள்ளையர்களையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளையும் சிறையிலடைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி விசாரணை கூட நடத்த முடியவில்லை.

மக்களுக்கு வழங்குவதாக கூறிய நிவாரணங்களை வழங்க முடியவில்லை.

ஆனால் எமது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களின் கொடுப்பனவை நிறுத்தியுள்ளார்கள். நாம் குறைத்த மருந்துப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நாம் வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளார்கள்.

ஏன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கேட்டால் நாடாளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

நாங்கள் 2015ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய போது எமக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. பெரும்பான்மை இன்றியே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரித்தோம்.

நூறு நாள் திட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே மீண்டும், மீண்டும் மக்கள் முன் பொய் உரைக்காமல் மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள். விவசாயிகளுக்கு வழங்குவதாக கூறிய இலவச உரத்தை வழங்குங்கள்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரியுங்கள். பட்டதாரிகளுக்கு வேலை வழங்குங்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள்.

இதற்கு நாம் மூன்றில் இரண்டு அல்ல அதற்கு மேலான ஆதரவையும் நாடாளுமன்றத்தில் வழங்கத் தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.