குரல் பதிவில் இருப்பது ஷானி அபேசேகரவின் குரலா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை!

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உரையாடும் தொலைபேசி உரையாடல் என பிரசாரம் செய்யப்பட்டு வரும் குரல் பதிவில் இருக்கும் குரல் ஷானி அபேசேகரவின் குரலா என்பது இன்னும் விசாரணை செய்து உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் தொலைபேசி உரையாடல் சம்பந்தமாக விசாரணை நடத்தாது கடந்த 7ஆம் திகதி ஷானி அபேசேகர பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஷானி அபேசேகர கைது செய்யப்பட உள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஷானி அபேசேகர கைது செய்யப்படுவாரா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், எந்த விசாரணைகளும் நடத்தப்படாது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது எனக் கூறியுள்ளார்.

விசாரணையின் முடிவில் இது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நுகேகொடை மேலதிக நீதவான் யு.கே.பெல்பொல எதிரில் நேற்று வாதங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக கூறப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க, நீதவான் தம்மிக்க ஹேமபால ஆகியோரின் குரல்கள் தொடர்பாக விசாரணை நடத்த, அவர்களின் தொலைபேசிகள் தொடர்பான அறிக்கைகளை பெற எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பாக மூன்று நீதிபதிகளிடம் உடனடியாக வாக்குமூலங்களை பெறுமாறு சட்டமா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.