மைத்திரியின் கட்சி எடுக்கும் முடிவு தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்! சி.சிவமோகன்

Report Print Theesan in அரசியல்

19ஆவது திருத்தத்தை அழிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி எடுக்கும் முடிவு தமிழர்களுக்கான துரோகமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் கிராம மட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அந்த வேலைகளை முடித்து அதற்கான சீட்டைகளை வழங்கியுள்ள போதிலும் கூட இன்று வரை அவர்களுக்கு பெருந்தொகையான பணம் வழங்கப்படாது மீதியாக உள்ளது.

எங்களைப் பொறுத்தவரையில் அரசாங்கம் ஒன்றே. எனவே புதிய அரசாங்கம் வந்திருந்தாலும் மக்களுக்கான சலுகை நிதிகளையும் வழங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.

எனவே அபிவிருத்தி நிதியை மக்கள் அமைப்புகளுக்கு வழங்கியமையால் அவர்களும் அந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்பதற்காக அமைப்பின் தலைவர்கள் தமது சொந்த நகைகளை கூட அடகு வைத்து வேலைகளை முடித்துள்ளனர்.

எனினும், இன்று வரை அந்த பணம் வழங்கப்படவில்லை. டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அந்த பணங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனவே புதிய அரசு தான் ஒரு அரசு என்ற ரீதியில் அந்த நிதிகளை பிரதேச செயலகங்களுக்கும் அரசாங்க அதிபருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

அடுத்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக கட்டப்பட்ட வீடுகளுக்கான மிகுதிப்பணங்கள் வழங்கப்படவில்லை. வடக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் அந்த நிலைப்பாடே உள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையும் தற்போதுள்ள இந்த அரசாங்கத்தின் ஒரு பங்கு. எனவே இவர்கள் பணங்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

மழைகாலத்தில் பெரும் சிரமப்பட்டிருக்கின்றனர். இருந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டி முடித்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு நிதிகள் வழங்கப்படவில்லை.

சஜித் பிரேமதாசவின் அமைச்சின் கீழ், பகுதியாக நிதிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது தடுக்கப்பட்டுள்ளது. மிகுதி நிதியை வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை நிதிகள் வழங்கப்படவில்லை. எனவே அந்த நிதியை இந்த அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.

2015ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு தமிழர்கள் காட்டமான பங்களிப்பை செய்திருந்தார்கள். அந்தவகையில், சுதந்திர ஆணைக்குழுக்களை நிறுவக்கூடிய 19ஆவது திருத்தச்சட்டத்தினை நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.

மக்களும் சுமூகமான வாழ்வை குறிப்பிட்ட காலம் வாழ்ந்திருந்தார்கள். தற்போது இதனை பொறுப்பெடுத்துள்ள ராஜபக்ச குடும்பத்தின் அரசு 19ஆவது திருத்தத்தினை இல்லாமல் செய்ய முற்படுகின்றது.

அதற்கு மைத்திரிபால சிறிசேனவின் கட்சி முண்டு கொடுப்பதாக இருந்தால் அவர் தமிழ் மக்களின் வாக்குகளில் வந்து அனுபவித்த

விடயங்கள் அனைத்தும் தவறான விடயமாக இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.