தமிழினம் விடுதலை பெறட்டும்! மாவை எம்.பி. சூளுரை

Report Print Rakesh in அரசியல்

“அடிமைத்தனங்களிலிருந்து தமிழினம் விடுதலை பெற வேண்டும். அதற்காக எமது இனத்துவ அடையாளங்களையும், எமது கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்."

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்

தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும், பட்டிப் பொங்கல் நிகழ்வும் சாவகச்சேரி நகர மத்தியில் இன்று நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களையும், அவற்றை வெளிப்படுத்தும் பண்புகளான கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பேணவும் பாதுகாக்கவும் வேண்டியதொரு கட்டாய தேவை தற்போது எழுந்துள்ளது.

எனவேதான் தமிழர் தாயகத்தில் இம்முறை மிகத் தீவிரமாக - உணர்வுபூர்வமாக உழவர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களையும், அவற்றை வெளிப்படுத்தும் பண்புகளையும் நாம் பேணிப் பாதுகாக்காவிட்டால் எமது நாகரிகத்தை இழந்து விடுவோம்.

இறுதியில் எமது இனம், மொழி அழிந்தே போய்விடும். எமது இனத்தையும், மொழியையும் பாதுகாத்து அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெறவே நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம்" - என்றார்.

Latest Offers

loading...