ராஜபக்சக்களின் கொட்டத்தை அடக்கவே சஜித் தலைமையில் களமிறங்குகின்றோம்! சரத் பொன்சேகா

Report Print Rakesh in அரசியல்

ராஜபக்சக்களின் அரசியல் பழிவாங்கல் உள்ளிட்ட அராஜக நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தோ அல்லது அரசியலிலிருந்தோ ஒதுக்கிவைப்பது எமது நோக்கமல்ல. அவரையும் அரவணைத்துக்கொண்டு ராஜபக்சக்களின் கொட்டத்தை அடக்குவதே எமது பிரதான இலக்கு.

ராஜபக்சக்களின் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டுமெனில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியடைந்தே தீரவேண்டும்.

சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி களமிறங்கினால்தான் இந்த வெற்றியை எம்மால் பெற முடியும்.

அதனால்தான் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாரிய கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.