காது கேட்காதவர்களும் இலங்கை நாடாளுமன்றில்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

பௌத்த மதத் தலைவர்களுக்கும், பிக்குகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை அளிப்பதா இல்லையா என்கிற முடிவினை அரசியல் கட்சிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெப்ரல் அமைப்பு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் பௌத்த பிக்குமார்கள் உட்பட மதத்தலைவர்கள் அரசியலில் உள்வாங்கப்பட்டதால் பௌத்த மதத்திற்கு பெரும் நிந்தை ஏற்பட்டதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பௌத்த தேரர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து அண்மைக்காலமாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.

குறிப்பாக பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களான மல்வத்து மற்றும் அஸ்கிரியப்பீடத்தின் மகாநாயக்கர்கள் உட்பட பலரும் மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவது உசிதமான விடயமல்ல என்ற கருத்துக்களையே கூறிவந்தார்கள்.

எனினும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மதத்தலைவர்கள் உட்பட பலரும் போட்டியிட எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கண்டியில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது உரையாற்றிய அவர், பௌத்த பிக்குமார்கள் உட்பட மதத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதன் ஊடாக அந்தந்த மதங்களுக்கே பேரவமானம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாடாளுமன்றத்தில் காதுகேளாத உறுப்பினர்களும் இருப்பதாக குறிப்பிட்டதோடு இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு தற்போதைய அனுபவம் வாய்ந்த பழைமை அரசியல்வாதிகளே தடையாக இருப்பதாகக் கூறினார்.