ரஞ்சனும், அசாம் அமீனும் இணைந்து அரசுக்கு விரோதமான செயற்பட்டுள்ளனர் - சின்ஹலே அமைப்பு

Report Print Vanniyan in அரசியல்

ரஞ்சன் ராமநாயக்க கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் மீதும் நீதிபதிகள் மீதும் நாட்டிலுள்ள கலைஞர்கள் மீதும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம். இப்போது அவர் எப்படி ஊடகங்கள் மீது தன்னுடைய அழுத்தத்தை பிரயோகித்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது என்று சிங்ஹலே அமைப்பின் செயலாளர் மடில்லே பஞ்ஞாலோக தேரர் தெரிவித்துள்ளார் .

நேற்றையதினம் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பகுதியில் அமைந்துள்ள விகாரைக்கு விஜயம் செய்த தேரர் ஊடகங்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஊடகவியலாளர் அசாம் அமீன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எங்கள் எல்லோரையும் பொறுத்தவரை பிபிசி சிங்கள செய்திச்சேவையில் பணியாற்றும் அசாம் அமீன் என்ற ஊடகவியலாளர் ஒரு சுயாதீனமான எந்த பக்கச்சார்பும் இல்லாதவராகவே கருதப்பட்டு வந்தார்.

பிபிசி என்பது எப்போதும் இலங்கை மீது யுத்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஒரு சர்வதேச ஊடகம் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இப்பொழுது ரஞ்சன் ராமநாயக்கவும் அசாம் அமீனும் இணைந்து எவ்வாறு அரசுக்கு விரோதமான செயற்பாடுகளை செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

அசாம் அமீன், ரஞ்சன் ராமநாயக்கவுடன் மாத்திரமல்லாது விஜித் விஜயமுனி சொய்சாவுடனும் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் பற்றியும் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரம் பற்றியும் பேசும் ஆதாரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

இந்த ஆதாரங்கள் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் பூசப்பட்ட கரியாகும். இவ்வாறான தேச விரோத செயல்களில் ஈடுபட்ட ரஞ்சன் ராமநாயக்க மற்றும் அவர் சார்ந்தவர்கள் செய்த தவறுகளை உடனடியாக கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் நிச்சயம் அழுத்தத்தை பிரயோகிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...