இராணுவத்தினரையும், விடுதலைப் புலி சந்தேகநபர்களையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுனில் ரத்நாயக்க உட்பட இராணுவத்தினரை மாத்திரம் விடுதலை செய்தால், உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்படலாம் என்பதால், சிறையில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான சுமார் 70 பேரையும் இராணுவத்தினருடன் ஒரே நேரத்தில் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணி செயற்பட்டாளரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கருணா, கே.பி ஆகியோருக்கு சுதந்திரமாக இருக்க முடியுமாயின் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 70 பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“றோயல் பார்க் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அன்டனி என்ற செல்வந்த வர்த்தகரின் மகனுக்கு ஜனாதிபதி சிறிசேன பொது மன்னிப்பு வழங்கினார்.

பொது மன்னிப்பு வழங்கிய பின்னர் இரண்டு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதனை சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர்.அந்த சவால் என்ன?.

மரண தண்டனை விதிக்கப்பட்டு பலர் சிறையில் இருக்கும் போது அன்டனியை மாத்திரம் எப்படி விடுதலை செய்தனர் என்பதே அந்த சவாலாகும். அது தவறு.

ஏன் மற்றவர்களுக்கு விடுதலை வழங்கவில்லை. இந்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். தற்போது அந்த வழக்கில் மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி.

கோட்டாபய ராஜபக்சவுக்கும் இதுதான் நடக்கும். போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரில் பலருக்கு நாட்டின் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்துள்ளன.

மரண தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருக்கின்றனர். சுனில் ரத்நாயக்க மாத்திரமல்ல, மேஜர் டிக்சன் ராஜமந்திரி, கோப்ரல் பிரியந்த ராஜகருண, சமந்த குமார என நான்கு இராணுவத்தினர் உள்ளனர்.

இந்த நான்கு இராணுவத்தினரை விடுதலை செய்தால், வழக்குகளுக்கு மேல் வழக்குகள் தொடரப்படும். ஏன் தமிழர்களான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கவில்லை?.

சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் ஏன் மன்னிப்பு வழங்கினீர்கள்?. என கேள்விகள் முன்வைக்கப்படும். இதனால், இரண்டு தரப்பினருக்கும் ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

புலிகளின் முன்னாள் தலைவர்களான கருணா, குமரன் பத்மநாதன் ஆகியோர் வெளியில் இருக்கின்றனர்.

சிறையில் இருக்கும் 70 பேரை விடுதலை செய்தால், நாடு புரண்டு விடுமா? இல்லை.

இதனால், பெப்ரவரி 4ஆம் திகதி விடுதலைப் புலிகளின் சந்தேகநபர்களையும், இராணுவத்தினரையும் ஒரே நேரத்தில் விடுதலை செய்யுங்கள் என அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.