மைத்திரி மற்றும் ரணில் சார்பில் ஆஜராக முடியாது! சட்டமா அதிபர்

Report Print Steephen Steephen in அரசியல்

மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்குகளில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சார்பில் தொடர்ந்தும் சட்டமா அதிபர் ஆஜராக மாட்டார் என இன்று உயர் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது வழக்கில் ஆஜரான அரச மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஷான ஜமீல் இது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் பிரதிவாதிகள் எதிர்வாத மனுக்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியது.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணிகள் இருவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர்.

வழக்கு தொடர்பாக எதிர்ப்புகள் இருக்குமாயின் அவற்றை மார்ச் மாதம் 6ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு அறிவித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளை மே மாதம், 12, 13 மற்றும் 14 திகதிகளுக்கு ஒத்திவைப்பது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பீ தெஹிதெனி, முர்து பெர்னாண்டோ மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.