ரெலோவுக்குள் மீண்டும் பிளவு

Report Print Rakesh in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரெலோ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் விவகாரத்தால் அந்தக் கட்சிக்குள் குழப்பங்கள் மூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் நேற்று ரெலோவின் தலைமைத்துவக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

அந்தவகையில் இக்கூட்டத்தின்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ரெலோவுக்கு தேர்தல் மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் எத்தனை ஆசனங்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக தலைமைத்துவக் குழுக் கூட்டத்தையே ரெலோ நேற்றுக் கூட்டியிருந்தது.

இருப்பினும் யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டம் என்பவற்றுக்கு வேட்பாளர்களாக சிலரை நியமித்து விட்டு இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்து தலைமைத்துவக் குழு உறுப்பினர்கள் சிலர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

இதனால் மீண்டும் ரெலோவுக்குள் பிணக்கு நிலை விஸ்வரூபமெடுத்துள்ள விடயம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சிறிரெலோ அமைப்பிலிருந்து விலகி தற்போது ரெலோவில் இணைந்துள்ள ஒருவருக்கு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும், கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையுடன் கலந்துரையாடாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இதனால் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் சிலர் நேற்றைய கூட்டத்தைப் புறக்கணித்து, அதில் கலந்துகொள்வதைத் தவிர்த்தனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்று அக்கட்சியின் உப தலைவர் ஹென்றி மகேந்திரன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கட்சித் தீர்மானத்தை மீறி வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கோடீஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கோடீஸ்வரன் கட்சியின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தில் நேற்றுப் பங்கேற்றுள்ளார். ஆனால், ஹென்றி மகேந்திரன் நேற்றைய கூட்டத்துக்கு வரவில்லை.

ஏற்கனவே ரெலோவின் முக்கியஸ்தர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகந்தா ஆகியோர் முரண்பட்டு, ரெலோவில் இருந்து வெளியேறி, புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில், வேட்பாளர் தெரிவால் ரெலோ மீண்டும் சிதறுண்டு போகும் நிலை தோன்றியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

Latest Offers