குரல் பதிவு வெளியிடு தொடர்பில் சிவில் வழக்கை தொடரப் போகும் ஹிருணிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலை தமது அனுமதியின்றி தொகுத்து வெளியிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தனக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறி வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவுகள் சம்பந்தமாக இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஹிருணிக்கா முறைப்பாடு செய்துள்ளார்.

திணைக்களத்தில் வெளியில் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நானும், ரஞ்சன் ராமநாயக்கவும் உரையாடுவதாக கூறும் தொலைபேசி உரையாடல் தொடர்பான குரல் பதிவு அனைத்து இடங்களிடம் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கணனி தொடர்பாக சட்டத்தின் 7 ஷரத்தில், இருவருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்களை சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி வெளியிட முடியாது என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் நானும், ரஞ்சன் ராமநாயக்கவும் உரையாடுவதாக கூறப்படும் மூன்று குரல் பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் திரிபுப்படுத்தி தொகுத்து வெளியிடடுள்ள அந்த குரல் பதிவுகள் தற்போது பரவி வருகிறது.

கவலைகுரிய விடயம் என்னவென்றால், வெளியாகியுள்ள இந்த குரல் பதிவுகளை நாட்டின் பிரதான தொலைக்காட்சிகள் தமது பிரதான செய்திகளில் வெளியிடுகின்றன.

அந்த உரையாடல் முழுவதிலும் இருப்பது எனது குரல் என்பதை எப்படி நிரூபிக்க முடியும். உரையாடுவது நானும் ரஞ்சன் ராமநாயக்கவும் என்பதை உறுதிப்படுத்த இரசாயன பகுப்பாய்வும் செய்யப்படவில்லை.

இப்படியான நிலையில் அதனை எப்படி எம்முடைய குரல்கள் எனக் கூற முடியும். அரசியல்வாதி என்ற ரீதியில் அல்ல பெண் என்ற ரீதியில் எனக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சமூகத்தில் பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடடுள்ளது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆபாசமாக பேசுகின்றனர். மிக ஆபாசமான செய்திகளை எனக்கு அனுப்புகின்றனர்.

தற்போது எனக்கு கொலை அச்சுறுத்தல் கூட விடுக்கப்படும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. மன தைரியம் உள்ளதால் நான் இவற்றை தாங்கி கொள்கிறேன்.

வேறு பெண்களுக்கும் இப்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த பெண் நடிகையாக இருக்கலாம். எவருடைய மனைவியாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ இருக்கலாம் அவர்களும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இது பெரிய குற்றச் செயல், பொதுமக்களும் இதற்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு வந்து பிரதான தொலைக்காட்சிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியும்.

நான் இத்துடன் நின்று விட மாட்டேன், இதனை சிவில் வழக்காக முன்னெடுத்துச் சென்று, செய்தியாக இதனை மக்கள் அறிய செய்த, மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சகல தொலைக்காட்சிகளுக்கும் எதிராக வழக்கு தொடர்வேன்.

இது நாட்டின் பிரதான பிரச்சினைகளை மறைக்க எடுத்த முயற்சி என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன.

முன்னர் வங்கிகளை கொள்ளையிட்டனர். தற்போது காய்கறி கடைகளில் கொள்ளையிடுகின்றனர். மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் இருக்கின்றனர் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.