சீனாவிடம் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டினை கொண்டு நடத்த முடியாத கடும் நிதி நெருக்கடி காரணமாக சீன அபிவிருத்தி வங்கியிடம் ஆயிரம் மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீன அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறுவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவை கடந்த 14ஆம் திகதி அனுமதியை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்காக ஆயிரத்து 195 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கை அபிவிருத்தி பிணை முறியை செலுத்த 568 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி தேவை என்பவற்றை குறிப்பிட்டு கடனை பெறுவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள் ஜனவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இலங்கையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அவர்கள் சாதகமான பதிலை வழங்கியதாகவும் அமைச்சரவை பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் 2018ஆம் ஆண்டு சீன அபிவிருத்தி வங்கியுடன் கடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளதுடன் அந்த உடன்படிக்கையின் கீழ் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ளது.

கடன் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள கடன் தொகையை இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக உயர்த்த சீன அபிவிருத்தி வங்கியுடன் புதிய உடன்படிக்கை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவை பத்திரத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.