கூட்டமைப்பு தலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் இல்லை! சுமந்திரன் எம்.பி

Report Print Mohan Mohan in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு புதிய தலைவர் வருவதாக இல்லை, அதற்கான சூழ்நிலை உருவாகவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தலைமை மாற்றம் குறித்து வெளிவரும் செய்திகளையும் அடியோடு நிராகரித்துள்ளதுடன், வேண்டுமென்றே தலைமை மாற்றம் என விசமத்தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் தலைமைப் பதவியை எடுக்கப்போவது குறித்தும், அதற்கு ஏற்பட்டுள்ள ஆதரவுகள், எதிர்ப்புக்கள் தொடர்பிலும் கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் மாற்றம் என்றோ அல்லது அதனை நான் எடுக்கப் போவதாகவோ வெளிவந்த செய்திகளில் எந்தவிதமான உண்மையுமில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தான். அவர் தான் இன்றைக்கும் தலைவராக இருக்கின்றார்.

மேலும் அவர் தலைவர் பொறுப்பில் இருந்து, தான் இறங்குவதாகவோ அல்லது அந்தத் தலைமைப் பொறுப்பில் இனி நீடிக்கப் போவதில்லை என்றோ எந்தவிதமான அறிவித்தலும் வரவில்லை.

ஆகையினால் இந்த தலைமை மாற்றம் என்கின்ற செய்தி வேண்டுமென்றே விசமத்தனமாகப் பரப்பப்படுகின்ற ஒரு பிரசாரம். அவ்வாறான தலைமை மாற்றம் மேற்கொள்கின்ற அப்படி ஏதும் முயற்சிகள் நடக்கவில்லை. எந்தவிதமான மாற்றமும் இப்போதைக்கு நடைபெறப்போவதும் இல்லை.

மேலும் கூட்டமைப்பில் ஒரு புதிய தலைவர் வருவதாகவே இல்லை. அதற்கான ஒரு சூழ்நிலை உருவாகவும் இல்லை. அப்படியான நேரத்தில் அதை ஒரு பெரிய பேசு பொருளாக எடுத்து அதைப்பற்றி தங்களுடைய கருத்துக்களை சொல்வதெல்லாம் வேண்டுமென்று ஒரு விசமத்தனமாக செய்யப்படுகின்ற பிரசாரம்.

அடுத்ததாக கூட்டமைப்பிற்குள் ஒரு தலைமைப் பதவி மாற்றம் ஏற்படுவதாக இருந்தால் கூட அது கூட்டமைப்பின் உள் விவகாரம். மற்றக் கட்சிகளுக்கு அதில் எந்தவிதமான ஈடுபாடுகளும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு யார் தலைவராக இருக்க வேண்டுமென்று நாங்கள் யாரும் எந்தக் காலத்திலும் கருத்துச் சொல்வது கிடையாது. அதே போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தலைவர் யாராக இருக்க வேண்டுமென்றும் நாங்கள் ஒரு காலமும் சொல்வதில்லை.

ஏனெனில் அது அவர்களுடைய கட்சி விவகாரம். ஆகையினாலே கூட்டமைப்பிற்குள் இல்லாதவர்கள் கூட்டமைப்பின் தலைவராக யார் வர வேண்டும், யார் வரக் கூடாது என்று சொல்வதெல்லாம் வேடிக்கையான விஷயங்கள். அது அவர்களோடு எந்தவிதத்திலுமே சம்மந்தமில்லாத விஷயங்களாகத் தான் இருக்கின்றன.

இதேவேளை தலைமைப் பதவியை தருவதற்கான அல்லது தலைமைப் பதவியை நாங்கள் ஏற்றுக் கொள்வதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. ஆனபடியினால் இப்போது இதற்கான கேள்வி எழ வேண்டிய அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers