ரணில் விலக விரும்பினாலும் சிலரது தேவைக்காக தொடர்ந்தும் இருக்கின்றார்!

Report Print Steephen Steephen in அரசியல்

ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினாலும் சிலரது தேவைக்காக அவர் தொடர்ந்தும் தலைவர் பதவியில் இருந்து வருகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சியில் தலைவர் பதவியை வழங்கும் போது நபர் பற்றி எவ்வித பிரச்சினையும் இல்லை. ரணில் விக்ரமசிங்க கல்விக்கும், முப்படைக்கும் சேவைகளை செய்துள்ளார்.

எனினும் அவரது எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் வேலை செய்யும் முறை என்பவற்றை தற்போது மக்கள் நிராகரிக்கின்றனர். மக்கள் புதிய முகத்தை கோருகின்றனர் என ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினேன்.

அப்போது ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைமை பொறுப்பை வேறு ஒருவருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தார். எனினும் சிலரது கோரிக்கைக்கு அமைய அவர் அதனை செய்யாமல் இருந்து வருகிறார்.

எவ்வாறாயினும் இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் ஒன்றாக இணைந்து சஜித் பிரேமதாசவின் தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வோம் எனவும் ரவிந்திர சமரவீர குறிப்பிட்டுள்ளார்.