ரணிலை வெட்டிவிடும் திட்டம் சஜித்திடம் இல்லை!

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவெடுத்திருக்கும் தலைமைத்துவப் பிரச்சினை தீர்க்கப்பட்டு இந்த வார இறுதியிலிருந்து பொதுத் தேர்தலை இலக்குவைத்து மாபெரும் கூட்டணியை உருவாக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“கூட்டணி அமைக்கும் முயற்சி மிகவும் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது. உண்மையில் சஜித் பிரேமதாச, கரு ஜயசூரியவுடனும் கலந்துரையாடியிருந்தார்.

எதிர்வரும் சில தினங்களில் இறுதிமுடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். பல வழிகள் எமக்கு முன்பாக பயணிக்க இருக்கின்ற போதிலும் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒரே பாதையை தெரிவுசெய்ய வேண்டும்.

தனி வழியாக இருக்கலாம். ஆனாலும் மக்கள் அனைவரையும் இணைத்துப் பயணிக்கும் பாதையாகவே அமைக்கப்பட வேண்டும்.

பெரும்பாலும் 26ம் திகதியானது தற்போதுள்ள அதிக வாழ்க்கைச் செலவு சுமை, நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடும் சதிகள், எமது எதிர்கால திட்டம் குறித்து சஜித் பிரேமதாச மற்றும் பலரும் இணைந்து கூட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

முதுகெலும்பு உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் உட்பட பலரையும் கொழும்புக்கு அழைத்துவந்து எமது திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளோம்.

அதன் பின்னர் பொதுத் தேர்தலுக்கான முடிவுகளை அறிவிக்கவுள்ளோம். நாங்கள் மிகவும் அவசரமான முடிவுகளையே வைத்திருக்கின்றோம்.

எனினும் கட்சித் தலைவர் அனைவரையும் இணைத்துப் பயணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஓர் இலக்கை அடைவதாயின் அதற்காக நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்பை செய்ய வேண்டும்.

இழைக்கப்பட்ட தவறுகளை சரிசெய்து ஐக்கிய தேசியக் கட்சியை புதிதாகப் பார்க்கக்கூடியவாறு அனைத்தும் திருத்தி அமைக்கப்படுவது அவசியம்.

ரணில் விக்ரமசிங்கவையோ அல்லது கரு ஜயசூரியவையோ அல்லது கட்சிக்குள் இருக்கும் எதிர்வாதிகளையோ வெட்டிவிட்டு முன்னேறிச்செல்லும் திட்டம் சஜித் பிரேமதாசவுக்கு இல்லை.

பெரும்பான்மை குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அதாவது மக்கள் தெரிவிக்கின்ற யோசனைக்கு கட்சித் தலைமை அடிபணிவது அவசியம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers