அரசின் பதவி நியமனங்கள் தொடர்பில் ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் சிவாஜிலிங்கம்

Report Print Sumi in அரசியல்

இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் செய்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாகவும், உள்நாட்டு, விசாரணைகளை வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கிய பொறிமுறை விசாரணையை முன்னெடுக்க தவறியமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கோரிக்கை அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை முன்னெடுக்குமாறு வலியுறுத்தவுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், பாதுகாப்பு தரப்பினர்களுக்கான பதவியுயர்வுகள் மற்றும் நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவி ஏற்று இரண்டு மாதங்கள் கடந்த சூழ்நிலையில், அவர் தன்னுடைய நடவடிக்கைகளில் சாதாரணமாக, பொருளாதார ரீதியாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என சொல்லப்படுகின்ற போதிலும், இன ரீதியாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட பலருக்கு பதவி உயர்வுகளையும், வாய்ப்புக்களையும் வழங்கி வருவதையிட்டு, நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம்.

குறிப்பாக இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவிற்கு முப்படைகளின் பிரதானி என்ற பதவியுயர்வையும், இதேபோன்று 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கடற்படை அதிகாரி ஒருவருக்கும் பதவியுயர்வையும் வழங்கியிருக்கின்றார்.

மிருசுவிலில் 8 பேரின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டு, மலசல கூட குழிக்குள் போட்டு, படுகொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியிருக்கின்றார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் மோசமான நடவடிக்கைகளாக பார்க்க முடியும். ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இந்தநிலையில் தான் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இனப் படுகொலை மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களை உள்நாட்டு விசாரணைகளை வெளிநாட்டு நீதிகள் தலைமையில் விசாரணை செய்வதற்காக ஒப்புக்கொண்டதை, நான்கரை ஆண்டுகள் கழித்தும் செய்ய மறுத்து வருவதால், இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் போது, இந்த கோரிக்கைகள் எம்மால், சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை செய்ய வலியுறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...