வரலாறை மறந்து செயற்படும் எவராலும் நிலையாக நிற்கமுடியாது! சிறிநேசன்

Report Print Kumar in அரசியல்

வரலாற்று பாடத்தினை மறந்து செயற்படுகின்ற எவரும் நிலையாக நிற்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி இன்றையதினம் இடம்பெற்றது.

இந்த போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எப்போதும் நல்லவற்றை செய்யும்போது சவால்கள் வரும். அவ்வாறான சவால்களை வெற்றிக்கொண்டு சாதனைகளை படைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. நாங்கள் புத்திசாலித்தனத்தில் கூர்மையாக இருந்தாலும் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது. ஒழுக்கம் இல்லாது விட்டால் நாங்கள் உயர்ந்தும் பயனில்லை.

கடந்த காலத்தில் சிலர் ஒழுக்கத்துடன் கல்வியை கற்றுக்கொள்ளாத காரணத்தினால் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தபோதும் அவர்களின் செயற்பாடுகளில் காணப்பட்ட மந்தமான நிலை காரணமாக அவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.

வரலாற்று பாடத்தினை மறந்து செயற்படுகின்ற எவரும் நிலையாக நிற்கமுடியாது. எந்த உயர்வு வந்தாலும் நாங்கள் மனிதர்கள் என்ற நிலையினை மறக்கக்கூடாது.

இன்று பல்வேறுபட்டவர்கள் காணப்படுகின்றார்கள். சரியாக செயற்படுகின்றவர்கள் தவறாக செயற்படுகின்றவர்கள், சுயநலத்திற்காக அரசியலை பயன்படுத்திக் கொள்கின்றவர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக அரசியலை பயன்படுத்திக் கொள்கின்றவர்களும் இருக்கின்றார்கள். எந்த துறையாக இருந்தாரும் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமாகும்.

தங்களது சுயநலத்திற்காக செயற்படும் சிலர் இளைஞர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச் சென்று குடிபோதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கும் உட்படுத்தும்போது மட்டக்களப்பு சமூகத்தில் ஒரு பிழையான இளம் சமூகத்தினை உருவாக்கும் நிலையிருக்கின்றது.

இளம்பராயத்தினர் மீதும் இளைஞர்கள் மீதும் சமூகம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வருடம் பிறக்கும்போதே அடிதடி சண்டைகளும் வாள்வெட்டு சம்பவங்களும் நடந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இதேபோன்று ஆவா குழுவொன்று வாள்வெட்டு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் தறுதலைகளாக இருப்பவர்களே இவ்வாறான வேலைகளை செய்கின்றனர். இதேபோன்று மட்டக்களப்பிலும் இளைஞர்களை சிலர் தறுதலைகளாக மாற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதை காண முடிகின்றது. அவ்வாறானவர்களுக்கு ஒரு முற்றுப் புள்ளியை நாங்கள் வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...