கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆபத்து! ரிசாட் பதியுதீன்

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்" என்று முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு வரும் என்றும், மியான்மரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டமை போன்ற மோசமான நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படும் என்றும் கூறினேன்.

அதன் ஆரம்பம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் இஸ்லாமியர்களுக்கென இருக்கும் சட்டங்களை இல்லாமலாக்கி, எல்லோருக்கும் பொதுவானதொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிற பிரேரணையொன்றினை அவர்களின் அணியிலுள்ள அத்துரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கிறார்.

இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்ளையும் இல்லாதொழிக்க இப்போது முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்.

அதேபோன்றுதான், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு மாவட்டத்தில் ஒரு கட்சி அல்லது சுயேட்சை அணி பெற வேண்டிய வாக்குளின் வெட்டுப் புள்ளியை 05 வீதத்திலிருந்து 12.5 வீதமாக மாற்றுவதற்கான பிரேரணையொன்றினை, அவர்களின் அணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ முன்வைத்திருக்கிறார்.

மேலும், சிறுபான்மையினத்தவர்களின் அரசியல் கட்சிகள் ஆபத்தானவை என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். இவையெல்லாம் இந்த நாட்டுக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்று எமக்குத் தோன்றவில்லை.

இந்த நிலையில், அவர்கள் குறித்து எமக்கு ஏற்பட்ட அச்சம், எம்மை விட்டும் விலகவில்லை.

'மைனாரிட்டி' அரசாங்கத்தை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் நடக்கின்றவர்கள், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறுவார்களாயின், சிறுபான்மை சமூகங்களுக்கு அவர்களால் முடிந்த அத்தனை அநியாயங்களையும் செய்வார்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...