ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜனநாயக போராளிகள்

Report Print Theesan in அரசியல்

ஜனநாயக போராளிகள் கட்சியானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியுடன் போராளிகள் என்ற ரீதியில் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று வவுனியாவில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளாக இருக்கின்றவர்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி நாம் பேச்சுக்களில் ஈடுபட இருக்கின்றோம்.

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களாகியும் தொடர்ந்து சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், அவர்களிற்கு ஒரு பொதுமன்னிப்பை வழங்கி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் போராளிகள் சார்பாக முன்வைக்கவுள்ளோம்.

இதேவேளை போராளிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த தலைமைத்துவ சபைக்குள் ஜனநாய போராளிகள் கட்சியும் இருக்கின்றது. அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்றைய எமது உயர்மட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதேவேளை போராளிகளின் கைகளில் அதிகாரம் வரும்வரை முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களிற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ் தலைமைகள் உதாசீனமாக செயற்படுவது தொடரத்தான் போகின்றது.

ஆகவே எதிர்வருகின்ற காலத்தில் போராளிகளின் ஜனநாயக வெற்றி முன்னாள் போராளிகள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு சிறந்தததொரு சந்தர்ப்பமாக அமையும்.

அண்மையில் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிற்குள் முன்னாள் போராளிகள் அதிகளவில் உள்வாங்கக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக நாம் கருதுகின்றோம்.

இதற்கும் அப்பால் மாற்று அரசியல் தலைமை என்பது பெயரளவில் இல்லாமல் சிறந்த கொள்கைகளோடு செயற்பட வேண்டும்.

தற்போது மாற்று தலைமைகள் என பேசிக்கொண்டு இருப்பவர்கள் கடந்த காலங்களிலே ஜனநாயக அரசியலிலே தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் கைகளிலே அதிகாரங்கள் வழங்கப்பட்டு அந்த காலங்களிலே செய்ய முடியாத நிலை இருந்தது.

தற்போது அவர்கள் மீளவும் ஒரு மாற்றுத்தலைமையை கொடுக்கப்போகின்றோம் என்பது உண்மையிலேயே நகைப்புக்கிடமான ஒரு விடயமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...