ரெலோவில் இருந்து விலகுகிறார் விந்தன்?

Report Print Rakesh in அரசியல்
104Shares

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் விலகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூலமாகக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தலைமைக் குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதாக அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

அதையடுத்தே விந்தன் கனகரட்ணம் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து விலகுவதான அறிவிப்பை தலைமைக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விரைவில் உத்தியோகபூர்மாக அறிவிக்கவுள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ கட்சிக்கு வழங்கப்பட்ட ஆசன ஒதுக்கீட்டில் விந்தன் கனகரட்ணம் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டிருந்தார். எனினும், அந்தக் கட்சியின் செயற்குழு அதற்கு அனுமதியளிக்கவில்லை.

எனினும், ரெலோவிலிருந்து விலகி விந்தன் கனகரட்ணம், வேறு கட்சியில் இணைவது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்தவிட்டார். அது தொடர்பில் எந்தத் தீர்மானத்தையும் தான் எடுக்கவில்லை எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, மூத்த உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் மற்றொரு மூத்த உறுப்பினரான விந்தன் கனகரட்ணமும் கட்சியிலிருந்து விலகுகிறார் என அறிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்படுகின்றது.