படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்! வேலுகுமார் எம்.பி சீற்றம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வந்த வீட்டுத் திட்டங்களைக்கூட கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இடை நிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்றிருந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதெ அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி மூலம் கண்டி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களை இந்த நயவஞ்சக அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது. தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும் முடங்கியுள்ளன.

குறிப்பாக கண்டி, அந்தான, கெலாபொக்க ஆகிய தோட்டங்களின் குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன. அரசாங்க பங்களிப்பு இல்லாததால் தனி வீட்டுக்காக காத்திருந்த மக்கள் பரிதவிக்கின்றனர்.

அது மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கில் அரசியல் கைக்கூலிகளை ஏவிவிட்டு தோட்டப்பகுதி வீடுகள் அடித்து நொறுக்கப்படும் பயங்கரநிலையும் உருவாகியுள்ளது. நாவலப்பிட்டிய பார்கேபல் சம்பவம் இதற்கு சான்றாகும்.

இவ்வாறான அநீதிகளை தட்டிக்கேட்காமல், அவற்றை நியாயப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்திலுள்ள தலையாட்டி தமிழ் அரசியல்வாதிகளும் விஞ்ஞான விளக்கங்களை வழங்கி வருகின்றனர்.

ஆட்சி மாறலாம், ஆனால் மக்கள் நலன்சார்ந்த கொள்கைகள் மாறக்கூடாது. மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த கோட்பாட்டை மறந்து நயவஞ்சக அரசாங்கமாகவே தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது.

படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல வெளியில் நல்ல முகத்தை காட்டிக் கொண்டு அடி மட்டத்தில் திட்டமிட்ட வகையில் பழிவாங்கள் இடம்பெற்று வருகின்றனர். தமிழ் பேசும் மக்கள் வஞ்சிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அபிவிருத்தித் திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளமை கூட இதன் ஓர் அங்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...