அரசை எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம்! முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன்

Report Print Theesan in அரசியல்

எமது மக்களுக்கு எதிரான விடயங்களை இந்த அரசு மேற்கொண்டால் எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவார்களேயானால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு விடயமாக தான் பார்க்க முடியும்.

நாம் அரசாங்கத்துடன் இருப்பது எமது மக்களுக்கான அபிவிருத்திகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காகவே தவிர எமது மக்களை சிறுமைப்படுத்துவதற்கல்ல.

எனவே பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்பதை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஏற்படுத்துவார்களேயானால் இந்த நாட்டை சரியான பாதையிலே முன் கொண்டு செல்ல முடியாது.

சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி இன்றைய ஜனாதிபதி வெற்றி பெற்றிருப்பது உண்மை தான்.

இருந்தாலும் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் சரியாக வாழாமல் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

எனவே இந்த அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து அதன் மூலமாக எமது மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்ள நாங்கள் தயங்கமாட்டோம்.

அதேவேளை மக்களுக்கு பிழையான செயற்பாடுகள் எதும் நடந்தால் நிச்சயாமாக ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.