நாடாளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடுவது இவர்கள் தான்!

Report Print Thirumal Thirumal in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.

ஹட்டன் மலையக மக்கள் முன்னணி தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணியில் எதிர்வரும் தேர்தலில் யார் எங்கே போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற பொறுப்பு மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவிற்கும், மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக குழுவினருக்குமே இருக்கின்றது.

அந்த அடிப்படையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் 98 வீதமானவர்கள் கலந்து கொண்டு இதற்கு ஏகமனதாக ஒத்துழைப்பு வழங்கினர்.

ஒரு சிலர் வெளியில் இருந்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகுவதாக தெரிவிக்கின்ற கருத்துக்கள் எல்லாம் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு அல்ல. எமக்கு என்று ஒரு கட்டுப்பாடு ஒரு நிர்வாகம், ஒரு தலைமைத்துவம் இருக்கின்றது.

அதற்கு அமைய ஜனநாயக ரீதியாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த இருவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக போட்டியிடவுள்ளனர்.

இதன்போது முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,

கட்சியின் ஏகமனதான தீர்மானத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கமைய எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் நான் போட்டியிடுகின்றேன். இந்த தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன் என்றார்.

இதன்போது பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணியை பொருத்தவரையில் இது ஜனநாயகத்தை பின்பற்றி வளர்ந்து வந்திருக்கின்ற ஒரு அமைப்பாகும். எனவே இன்று எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் படி நாங்கள் செயற்படவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

Latest Offers

loading...