அடக்குமுறைகளுக்கு எதிராக துணிவுடன் செயற்படுகின்றனர் ஊடகவியலாளர்கள்! ஞா.சிறிநேசன்

Report Print Rakesh in அரசியல்

ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகள், சர்வாதிகாரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராகத் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது துணிவுடன் செயற்படுகின்றவர்கள்தான் ஊடகவியலாளர்கள். ஊடகவியலாளர்களின் ஒற்றுமையான குரல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் பக்கபலமாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொல்லப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஸ்ரீநேசன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்கள் எதற்கும் விலை போகாமல் மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்.

உண்மையான ஊடகவியலாளர்களை நாங்கள் எப்போதும் மதிக்க வேண்டும். அவர்களது மரியாதையை எந்த இடத்திலும் குறைத்துவிடக் கூடாது.

அமரர் சுகிர்தராஜனின் நினைவை நாங்கள் மனதில் சுமந்து கொள்கின்றோம். இவ்வாறான ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் காரணமாகத்தான் தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் வெளியுலகத்துக்குப் படம் பிடித்துக் காட்டப்படுகின்றன.

அதனால் பல அநீதிகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறான உன்னதமான சேவை செய்பவர்களை நாங்கள் எப்போதும் மறக்கக்கூடாது.

ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும். ஊடகவியலாளர்களின் ஒற்றுமையான குரல்களுக்கு நாங்களும் பக்கபலமாக இருப்போம்.

மாறாக அதிகார சக்திகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் ஊதுகுழல்களாக ஊடகவியலாளர்கள் இருந்துவிடக் கூடாது.

இன்னும் இன்னும் இவ்வாறான உன்னத உயிர்கள் பறிக்கப்படுகின்ற சூழல் இந்த நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் நாட்டின் ஜனநாயகம் பொய்த்துப் போய்விடும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல்கள் - நவோஜ்

Latest Offers

loading...